பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்ட சம்பங்கி பூக்கள்


பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்ட சம்பங்கி பூக்கள்
x
தினத்தந்தி 30 May 2021 4:35 PM GMT (Updated: 30 May 2021 4:35 PM GMT)

ஊரடங்கால் சம்பங்கி பூக்கள் விற்பனை முடங்கியதால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்:  

கொரோனா 2-ம் அலை
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை பரவல் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதையடுத்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பூக்கடைகள் மூடப்பட்டன. இதனால் வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் பூக்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் பூக்களால் நிலையான வருமானத்தை பெற்று வந்த விவசாயிகள் தற்போது வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். 

முழு ஊரடங்கு என்பதால் பூக்களை பறிக்க ஆட்கள் கிடைப்பது இல்லை. அப்படியே ஆட்கள் கிடைத்து பூக்களை பறித்தாலும் சந்தைக்கு எடுத்துச்சென்று அவற்றை விற்பனை செய்ய முடியாது.
இதனால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

நிவாரணம் வேண்டும்
இதுகுறித்து திண்டுக்கல் அருகே உள்ள குஞ்சனம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசந்திரனிடம் கேட்ட போது, எனது தோட்டத்தில் 3 ஏக்கரில் சம்பங்கி பூக்களை சாகுபடி செய்தேன். 

திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் சம்பங்கி பூக்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும். ஒரு கிலோ சம்பங்கிக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலை கிடைத்து வந்தது. 

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுவிட்டன. திருமண நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. இதனால் பூக்கள் விற்பனை சரிவடைந்தது. 

இதனால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

காய்கறிகள், பழங்கள் விற்பனை கூட நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பூக்கள் விற்பனைக்கும் அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Next Story