விழுப்புரம் பகுதியில் முடங்கிப்போன பட்டுசேலை உற்பத்தி தொழில்


விழுப்புரம் பகுதியில் முடங்கிப்போன பட்டுசேலை உற்பத்தி தொழில்
x
தினத்தந்தி 30 May 2021 5:04 PM GMT (Updated: 30 May 2021 5:04 PM GMT)

ஊரடங்கு உத்தரவினால் விழுப்புரம் பகுதியில் பட்டுசேலை உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது. எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு அரசு, உதவிக்கரம் நீட்டக்கோரி நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம், 

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நெசவுத்தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது. வேட்டி- புடவை, துண்டு போன்ற உடைகளை தயாரிக்கும் கலை நெசவுக்கலை. பருத்தியில் இருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர். தட்பவெப்ப நிலைகள் உடலை தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்ததோடு நமது கலைச்சிறப்பையும், நுண்ணறிவையும் காட்டி வந்தது நெசவுக்கலை.

தமிழர்கள் பண்டைக்காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும், சரிகைகள் இணைந்த ஆடைகளை புனைந்தும் வந்துள்ளனர். இன்றைக்கும் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பட்டுச்சேலைகளை அணிவதையே பெண்கள் பெருமையாக கருதுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம், காஞ்சீபுரம், ஆரணி, சிறுமுகை, சேலம், ஓமலூர், திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டு சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு, மோட்சகுளம் ஆகிய கிராமங்களிலும் காலம், காலமாக பட்டு சேலை உற்பத்தியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுக்கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு தறிக்கும் 2 பேர் வீதம் 600-க்கும் மேற்பட்ட நெசவாளர்களும், அதனை சார்ந்த தொழில் மூலம் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதுபோல் சிறுவந்தாடு, மோட்சகுளம் பகுதியில் உள்ள சுமார் 400 பட்டுப்புடவை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பட்டு சேலைகளை வாங்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொழிலையே நம்பியுள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் தற்போது வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பட்டு விற்பனை நிறுவனத்தினர், பட்டு சேலைகளை ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். ஏற்கனவே உற்பத்தி செய்து கைவசமுள்ள பட்டு சேலைகளையும் விற்பனை செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர்.
அதேபோன்று இந்த தொழிலை சார்ந்துள்ள பாலீஷ், புட்டாஸ் கட்டிங், சாயம், டையிங், ரீலிங், வைண்டிங் என பல்வேறு தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வரும் தொழிலாளர்களும் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த ஊரடங்கினால் பட்டு நெசவு தொழில் முற்றிலும் முடங்கிப்போயுள்ளதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பட்டு நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்த கொரோனா ஊரடங்கு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம் அடைந்தன. அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் முன்பு இருந்த நிலையை விட இன்னும் கீழே போய் விடக்கூடிய சூழல் காணப்படுகிறது. இந்த ஊரடங்கு காரணமாக சிறுவந்தாடு, மோட்சகுளம் பகுதிகளில் கைத்தறி பட்டு சேலைகள் தயாரிக்கும் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை மாதங்கள் ஆகுமோ என்று தெரியவில்லை. அதுவரை நெசவாளர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றனர். 

Next Story