வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்


வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
x
தினத்தந்தி 30 May 2021 5:07 PM GMT (Updated: 30 May 2021 5:07 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். 

வீடு, வீடாக சென்று பரிசோதனை

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியின் ஒரு பகுதியாக வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்  உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல்-விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கி மருத்துவ உபகரணங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- 

மருத்துவ உபகரணங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் விதமாக வட்டார அளவில் துணை கலெக்டர் நிலையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
மேலும் கொரோனா நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் விதமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதிக்கும் விதமாக பல்ஸ்ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

1 லட்சம் பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய 1,500 பல்ஸ் ஆக்சிமீட்டர், 1,500 தெர்மல்ஸ்கேனர் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. 
இதன் மூலம் கிராம பகுதிகளில் ஒரு வாரத்தில் 1 லட்சம் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 540 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே கொரோனா சிகிச்சை மையம் அமைய உள்ள கொற்கை பாலிடெக்னிக் கல்லூரியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம்  சாலையில் உள்ள மின் மயானத்தை பார்வையிட்டார். அப்போது மயானத்துக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், நகரசபை முன்னாள் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story