அதிக விலைக்கு காய்கறி விற்ற 7 வாகனங்களின் அனுமதி ரத்து
ஊட்டி, கூடலூரில் அதிக விலைக்கு காய்கறி விற்ற 7 வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
முழு ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் பழங்கள் விற்பனைக்கு என அனுமதி பெற்றுவிட்டு காய்கறி விற்பனை செய்வதாகவும், அதை பொதுமக்களுக்கு அதிக விலைக்கு வழங்குவதாகவும் தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்தார். அப்போது அந்த வாகனத்தில் காய்கறி விலைப்பட்டியல் ஒட்டாததும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த வாகனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டு ரத்து செய்து, நடவடிக்கை எடுக்கப்படடது.
இதற்கிடையில் கூடலூர், பந்தலூர் பகுதியில் 204 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதை கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமையிலான அலுவலர்கள் ரோந்து சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது காய்கறி, பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் 6 வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூறும்போது,
அரசு நிர்ணயித்த விலைப்பட்டியலை வாகனங்களில் ஒட்ட வேண்டும். அதிக விலைக்கு விற்றால் வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும். இது தொடர்பாக புகார்கள் இருந்தால் 9688319370 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story