குடியாத்தம் அருகே வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் 2 சிறுத்தைகள்


குடியாத்தம் அருகே   வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் 2 சிறுத்தைகள்
x
தினத்தந்தி 30 May 2021 10:42 PM IST (Updated: 30 May 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே வனப்பகுதியில் 2 குட்டிகளுடன், 2 சிறுத்தைகள் நடமாடுவதாகவும், விவசாயிகள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம்

சிறுத்தைகள் நடமாட்டம்

குடியாத்தம் வனப்பகுதியில் கல்லப்பாடி காப்பு காடுகள், வீரசெட்டிபள்ளி காப்பு காடுகள் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் செம்மர தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களில் தினமும் மாலை வேளைகளில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் முருகன் உள்பட வனத்துறையினர் மற்றும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ரோந்து சென்று வருகின்றனர்.

ரோந்து செல்லும்போது கடந்த சில தினங்களாக இரண்டு பெரிய சிறுத்தைகள், இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிவதை கண்டுள்ளனர். காப்புக் காடுகள் பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளதால், தண்ணீர் குடிப்பதற்காக சிறுத்தைகள் அந்தப்பகுதிக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் செல்லவேண்டாம்

தொடர்ந்து சில நாட்களாக ரோந்து செல்லும் போது குடியாத்தம் வனச்சரகத்தை சேர்ந்த முதலியார் ஏரி, கல்லப்பாடி, கணவாய் மோட்டூர், அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம் உள்ளிட்ட காப்புக் காடு பகுதிகளில்  இந்த சிறுத்தைகள் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவேண்டாம் எனவும், காப்புக் காடுகளை தாண்டி மற்ற கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கள் கலர்பாளையம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story