கூடுதல் விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை
குமரி பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், கூடுதல் விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நாகர்கோவில்:
குமரி பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், கூடுதல் விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சர் நாசர்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று முன்தினம் குமரிக்கு வந்தார். அவர் நேற்று காலை குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் பாலகங்கள், பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பால்பண்ணை ஆய்வகங்களையும் ஆய்வு செய்தார். அப்போது பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் நந்தகோபால் உடன் இருந்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பால் உப பொருட்கள்
குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது 53 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு தோராயமாக 6,600 லிட்டர் பாலும், தேவைக்கேற்ப திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஒன்றியங்களிலிருந்து 15,000 லிட்டர் பாலும் கொள்முதல் செய்து பால் விற்பனை செய்கிறது.
அத்துடன் பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம்பவுடர், ஐஸ்கிரீம், சாக்லேட், தயிர் மற்றும் மோர் போன்றவற்றினையும் ஆவின் பாலகங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
விலை குறைப்பு
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் சலுகை விலையில் பால் அட்டை மூலமும் பால் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் ஆவின் பால் லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசால் குறைக்கப்பட்ட விலையில் ஆவின்பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், நுகர்வோர் தேவைக்கேற்ப ஆவின்பால் இருப்பு இருக்கிறதா என்பது குறித்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு
ஆவின் நிறுவனத்தை பொறுத்த வரையில் 36 லட்சம் லிட்டர் ஒரு நாளைக்கு பால் உற்பத்தி செய்கின்ற நிலையில் தற்போது அது 39 லட்சம் லிட்டராக உயர்ந்திருக்கிறது. அதே போல் விற்பனை விகிதமும் 3 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.
அதன் அடிப்படையில் சென்னை, தாம்பரம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது குமரி மாவட்டத்திற்குட்பட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகம், வடசேரி உழவர் சந்தை, அண்ணா விளையாட்டு அரங்கம், அண்ணா பஸ் நிலையம், ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பால் பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
11 கடைகளுக்கு சீல்
அடுத்தபடியாக திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இந்த கொரோனா காலத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். மக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் ஆவின் பால் லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பின்பும் ஒரு சில இடங்களில் அரசின் வழிமுறைகளை மீறி கூடுதலான விலையில் பால் விற்பனை செய்வது கண்டறிப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் விலையில் பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆவின் பொதுமேலாளர் தங்கமணி, தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story