மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.15¾ லட்சம் அபராதம் வசூல்; 1,956 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல்:
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே வாகன சோதனையின் போது ஊரடங்கை மீறும் நபர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ரூ.15¾ லட்சம் அபராதம்
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, அதாவது கடந்த 6 நாட்களில் முககவசம் அணியாத 4,115 பேர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 92 பேரிடம் இருந்து ரூ.46 ஆயிரமும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 33 பேரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 500-ம், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,393 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 500-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக கடந்த 6 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 5,633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story