பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி: தபால் நிலைய ஊழியர் பணி இடைநீக்கம்


பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி: தபால் நிலைய ஊழியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 30 May 2021 6:26 PM GMT (Updated: 30 May 2021 6:26 PM GMT)

கந்தம்பாளையம் அருகே பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்த தபால் நிலைய ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கந்தம்பாளையம்
தபால் நிலைய ஊழியர்
நாமக்கல் மாவட்டம் குன்னமலை ஊராட்சி இரும்பு பாலம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 31). இவர் கந்தம்பாளையம் அருகே சாத்தம்பூர் மாரியம்மன் கோவில் புதூரில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த தபால் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் தொடர் வைப்பு நிதியும் செலுத்தி வருகின்றனர்.
இந்த வைப்பு நிதியின் கணக்கு, வழக்குகளை தங்கவேல் பார்த்து வந்தார். மேலும், அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று, அதை அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
பணியிடைநீக்கம்
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கவேல் பொதுமக்களிடம் இருந்து தொடர் வைப்பு நிதி பணத்தை பெற்று, அதை தபால் நிலையத்தில் செலுத்தாமல் மோசடி செய்து வருவதாகவும், போலியாக கணக்கு புத்தகத்தில் வரவு வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களின் புகார் குறித்து, நாமக்கல் மேற்கு அஞ்சல் கோட்ட ஆய்வாளர் ரமேஷ், தங்கவேலிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தங்கவேல் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஞ்சல் கோட்ட அதிகாரிகள் தங்கவேலை பணி இடைநீக்கம் செய்தனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், தங்கவேல் பண மோசடி செய்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கவேலிடம் இருந்து பொதுமக்களின் தொடர் வைப்பு நிதி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தற்போது தணிக்கை செய்து வருகிறோம். தணிக்கையின் முடிவில் தான் அவர் மோசடி செய்த பணத்தின் மதிப்பு தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கந்தம்பாளையம் அருகே தபால் ஊழியரே பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story