நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 5,825 பேருக்கு கொரோனா பாதிப்பு; 49 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 5,825 பேருக்கு கொரோனா பாதிப்பு; 49 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 May 2021 6:26 PM GMT (Updated: 30 May 2021 6:26 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் 5,825 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 49 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்:
5,825 பேருக்கு தொற்று
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதன் தாக்கம் மிதமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300 ஆக இருந்தது. தற்போது அது 700, 800 ஆக அதிகரித்து உள்ளது.
சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 30,423 ஆகும். கடந்த 22-ந் தேதி வரை மாவட்டத்தில் 24,598 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் 5,825 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதேபோல் கடந்த 22-ந் தேதி வரை 185 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். இது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. அதிக பாதிப்பு கண்டறியப்பட்ட 94 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வசிப்போருக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர் காய்ச்சல்
இதுதவிர கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என 8,389 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் லேசான பாதிப்பு கண்டறியப்பட்ட 3,699 பேர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெறும் நபர்கள் தொடர் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், தலை சுற்றல், ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு கீழ் குறைதல், அதிகமான உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பரவலை குறைக்க முடியும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story