5 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி


5 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 31 May 2021 12:06 AM IST (Updated: 31 May 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

5 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

கோவை

கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் மையங்கள் முன் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.

தடுப்பூசி

கோவை மாவட்டம் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது.

 மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மாநில அரசு வழங்கும் தடுப்பூசி 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் போடப்படுகிறது.

தொழில்நகரமாக கோவையில் கடந்த வாரம் முதல் தொழிற்சாலை களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. 

மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்கு சுகாதார பணியாளர்கள் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர். மேலும் ஆங்காங்கே முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இருப்பு இல்லை


கடந்த 21-ந் தேதி முதல் தற்போது வரை 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 76 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டு உள்ளது. இதில் பெரும்பானவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. 

தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் மாநில அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

இதனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

இதனால் தினமும் தடுப்பூசி மையங்கள் முன்பு காலை முதல் பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர். மாநகராட்சியின் 32 நகர்ப்புற சுகாதார மையங்களில் தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு மையத்தில் 350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு, அதன்படி தடுப்பூசி போடப்படுகிறது. கோவையில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

 கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒரு மையத்தில் தினசரி குறைந்தது 500 பேருக்காவது கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story