மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 லாரி டிரைவர்களை கைது
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 லாரி டிரைவர்களை கைது செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
நொய்யல்
வாகன சோதனை
ஓசூர், பெங்களூரு பகுதியில் இருந்து காய்கறி மற்றும் பேப்பர் ரோல், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் 3 லாரிகளில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகள் ஓசூரில் இருந்து மதுரைக்கு அந்த லாரிகள் சென்று கொண்டிருந்ததும், அதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
3 டிரைவர்கள் கைது
இதையடுத்து லாரிகளில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக லாரி டிரைவர்கள் விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் கடற்கரை (வயது 29), சங்கரன்கோவில் அருகே உள்ள சுரண்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (38), சிவகாசி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் மாரீஸ்வரன் (27) ஆகிய 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும் காய்கறி, பேப்பர் ரோல், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மதுபாட்டில்கள் மற்றும் அந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story