புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் திடீர் தீ


புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் திடீர் தீ
x
தினத்தந்தி 31 May 2021 12:24 AM IST (Updated: 31 May 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

நொய்யல்
திடீர் தீ விபத்து 
கரூர் மாவட்டம், புகளூர் ரெயில்வே கேட் அருகே காகித ஆலை துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து  உற்பத்தியாகும் மின்சாரம் உயர் மின் கோபுரத்தின் கம்பிகள் மூலமாக, இங்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து புகளூர் காகித ஆலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணைமின்நிலையத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென வெடிச்சத்தம் வந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து அங்கு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென பிடித்து துணை மின் நிலையத்தில் இருந்த அனைத்து பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 
போராடி அணைத்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் காகித ஆலை காவலாளி அலுவலகத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு விரைந்து வந்து அங்கு மின் கம்பங்களில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு கருவிகளில் உள்ள கெமிக்கல் பவுடரை அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story