விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம் ஆட்டை தூக்கிச் சென்றதால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆட்டை தூக்கிச் சென்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்ரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆட்டை தூக்கிச் சென்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுத்தை அட்டகாசம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வேம்பையாபுரம் கிராமத்தில் மக்கள் விவசாய தொழிலை நம்பியுள்ளனர். மேலும் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.
இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் வன விலங்குகளால் அடிக்கடி இங்குள்ள விவசாய விளை நிலங்கள் சேதம் விளைவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியில் சிறுத்தை அட்டகாசம் மீண்டும் தொடங்கியுள்ளது. வேம்பையாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மருதுபாண்டி (வயது 40) என்பவர் தனது வீட்டில் 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பியது. பின்னர் வீட்டின் பின் பகுதியில் மருதுபாண்டி ஆட்டு கொட்டகையில் ஆடுகளுக்கு இலை, தலைகளை வெட்டி போட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆடுகள் கலைந்து சத்தம் போட்டது.
ஆட்டை தூக்கிச் சென்றது
உடனே மருதுபாண்டி பார்த்தபோது சிறுத்தை ஒன்று ஒரு ஆட்டை அடித்து வனப்பகுதிக்கு தூக்கி ஓடியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருதுபாண்டி, இதுபற்றி உடனடியாக பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஏற்கனவே இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை வந்து ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து செல்வதால் தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story