காவலாளியை கட்டிப் போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை


காவலாளியை கட்டிப் போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை
x
தினத்தந்தி 31 May 2021 1:23 AM IST (Updated: 31 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காவலாளியை கட்டிப்போட்டனர்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் முத்தூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக அந்தக் கடை மூடப்பட்டிருந்தது.
கடையின் இரும்பு ஷட்டர் மீது இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 5 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த காவலாளி கண்ணன் (வயது 38) என்பவரை அலேக்காக தூக்கி கயிற்றால் கட்டிப் போட்டனர்.

ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள்

பின்னர் கடையில் இரும்பு ஷட்டர் மீது பொருத்தி இருந்த இரும்பு கம்பியை உடைத்தனர். அதன்பிறகு ஷட்டர் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை அப்படியே தூக்கி கொணடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1¼ லட்சம் ஆகும். இது குறித்து தகவல் அறிந்த காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.
டாஸ்மாக் கடையில் திருடிய ஆசாமிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story