பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வந்த குடிநீர்
தஞ்சையில் பாசி, தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வந்த குடிநீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பாசி, தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வந்த குடிநீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடிநீர்
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெண்ணாற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கொள்ளிடம் ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து சுத்தம் செய்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நகரின் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அவைகளில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆங்காங்கே பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தேவைப்படும் இடங்களுக்கு லாரிகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பாசி, தூசிகள்
வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மூலமாக கொண்டு வரப்படும் தண்ணீரை மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்காக கரந்தை, வடக்குவாசல், வண்டிப்பேட்டை, அருளானந்தம்மாள்நகர், வண்டிக்காரத்தெரு, முனியாண்டவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
மாநகராட்சி குடிநீரை பொதுமக்கள் அதிகஅளவில் பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக மாநகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் பாசிகள், தூசிகள் கலந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை பழைய மாரியம்மன்கோவில் சாலையில் சின்னக்கடைதெரு, வெள்ளைக்காரன் பங்களா தெரு, ஜெபமாலைமாதா கோவில் தெரு, சாலைக்கார தெரு, ஒத்தக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பாசிகள், தூசிகள் கலந்து குடிநீர் வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துர்நாற்றம்
இருந்தாலும் குடிநீர் தேவைப்படுவதால் வலைகள் மூலம் பாசிகளை வடிகட்டி குடிநீரை குடங்களில் பிடித்தனர். இந்த குடிநீரை பிடித்து வைத்து 1 மணிநேரத்திற்கு பிறகு பயன்படுத்தினாலும் தண்ணீரின் நிறம் மாறவில்லை. தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீரை பொதுமக்கள் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
குடிநீருக்கு வேறு வழியில்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ள குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்தி வருகின்றனர். துர்நாற்றத்துடன் பாசி கலந்து வரக்கூடிய குடிநீரை பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுமோ? என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை மாதம் ஒருமுறை சுத்தம் செய்தும், குடிநீரை சுகாதாரமான முறையில் வழங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story