தாளவாடி பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் தோட்டத்திலேயே அழுகும் முட்டைகோஸ்கள்- விவசாயிகள் வேதனை


தாளவாடி பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் தோட்டத்திலேயே அழுகும் முட்டைகோஸ்கள்- விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 30 May 2021 9:07 PM GMT (Updated: 30 May 2021 9:07 PM GMT)

தாளவாடி பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் தோட்டத்திலேயே முட்டைகோஸ்கள் அழுகுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

தாளவாடி
தாளவாடி பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் தோட்டத்திலேயே முட்டைகோஸ்கள் அழுகுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
முட்டைகோஸ்
தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தொட்டகாஜனூர், திகனாரை, பனக்கள்ளி, மல்லன்குழி, தலமலை போன்ற மலைக்கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
 இங்கு ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாத பயிரான முட்டைகோசை இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்திருந்தார்கள். தற்போது பல ஏக்கரில் முட்டைகோஸ் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. 
அழுகுகின்றன...
இந்தநிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி சந்தைகள் மூடப்பட்டுள்ளன. சரக்கு ஆட்டோக்கள், வேன்களில் மட்டுமே காய்கறிகள் விற்கப்படுகின்றன. இதனால் தாளவாடி பகுதிக்கு சென்று காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் செல்லவில்லை. 
ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே தோட்டங்களுக்கு சென்று ஒரு கிலோ முட்டைகோஸை 2 ரூபாய்க்கு கேட்கிறார்கள். இதனால் விற்க மனமின்றி பல விவசாயிகள் முட்டை கோஸ்களை அறுவடை செய்யாமல் அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டார்கள். பல இடங்களில் முட்டைகோஸ்கள் செடியிலேயே அழுகி காணப்படுகின்றன. 
கடனே மிஞ்சுகிறது
இதுபற்றி தாளவாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரம் செலவாகிறது. 15 டன் வரை மகசூல் எடுக்க முடியும். தற்போது வெளியூர் மொத்த வியாபாரிகள் வராததால் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. அதனால் காட்டிலேயே விட்டுவிட்டோம். கடன் வாங்கி விவசாயம் பார்க்கும் எங்களுக்கு மேலும் கடனும், வேதனையுமே மிஞ்சுகிறது’ என்று வேதனைப்பட்டார்கள்.

Next Story