பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு; கொரோனா கூடுதல் படுக்கை வசதி மையத்தை பார்வையிட்டார்
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி மையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி மையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பு
பெருந்துறையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தொடக்கத்தில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருந்தன. தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் 60 படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொறுப்பு ஏற்றார். அவர் பொறுப்பு ஏற்ற உடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தினார்.
ஈரோடு மாவட்ட கொரோனா தடுப்புக்கான பொறுப்பு அமைச்சராக ஈரோட்டை சேர்ந்த அமைச்சர் சு.முத்துசாமியை நியமித்தார்.
கூடுதல் படுக்கை வசதி
பதவி ஏற்ற கையுடன் ஈரோடு வந்த அமைச்சர் சு.முத்துசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்பு அடைந்த மக்களுக்கு உடனடி தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்களின் உதவியை நாடினார். இதனால் ஏராளமானவர்கள் தாமாக முன்வந்து நிதி வழங்கினர்.
தனியார் பங்களிப்புடன் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்டமாக 300 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 3 பெரிய அரங்குகள் அமைத்து தனித்தனி ஆக்சிஜன் சிலிண்டர் வசதி, தனித்தனி மின்விசிறி வசதியுடன் 300 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன.
இந்த மையம் 2 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கூடுதல் படுக்கை வசதி மையத்தை பார்வையிட்டார்.
பணி நியமன உத்தரவு
இதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் ஈரோடு வந்தார். காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை வந்தார். காலை 9.50 மணிக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு வந்த அவர், கூடுதல் படுக்கை மையத்தை பார்வையிட்டார்.
நேர்த்தியாக படுக்கைகள் போடப்பட்டு, ஆக்சிஜன் வசதி, மின்விசிறி வசதி செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதுபற்றி அமைச்சர் சு.முத்துசாமியிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.
மேலும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டு உள்ள 5 டாக்டர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன உத்தரவினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார்.
இதுபோல் ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிவாரண பொருட்களை வழங்கியும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு திருப்பூர் சென்றார்.
அமைச்சர்கள்
சுமார் 15 நிமிடம் அவர் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். ஆய்வின்போது தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதல்-அமைச்சரின் முதன்மை தனி செயலாளர் த.உதயச்சந்திரன், தனி செயலாளர் உமாநாத், ஈரோடு மாவட்ட கொரோனா கட்டுப்பாடு சிறப்பு அதிகாரி ரா.செல்வராஜ், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், எம்.பி.க்கள் திருப்பூர் கே.சுப்பராயன், அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஆர்.டி.ஓ. சைபுதீன், மின்சார வாரிய ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி, தாசில்தார் கார்த்திக் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
கூடுதல் காவல்துறை தலைவர்கள் தாமரைக்கண்ணன், டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story