சேலத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை


சேலத்தில்  மேம்பாலத்தில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2021 10:04 PM GMT (Updated: 30 May 2021 10:04 PM GMT)

மேம்பாலத்தில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

சூரமங்கலம்:
சேலத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா நோயாளி
சேலம் மல்லமூப்பம்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 66), விவசாயி. இவருடைய மனைவி முருகாயி. இவர்கள் இருவரும் சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வந்தனர்.
தங்கவேல் கடந்த 27-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின்னர் டாக்டரின் ஆலோசனைப்படி 18 நாட்களுக்கு உண்டான மருந்துகளை அவர் வாங்கினார்.
அதே நேரத்தில் தங்கவேல் இந்த மருந்தை இரண்டே நாட்களில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அவருக்கு இருமல் அதிகமாகி உள்ளது. இதனால் தங்கவேல் மன வேதனை அடைந்தார்.
மேம்பாலத்தில் இருந்து குதித்தார்
இந்த நிலையில் நேற்று மாலையில் சூரமங்கலம் அடுத்துள்ள ரெட்டிபட்டி மேம்பாலத்துக்கு தங்கவேல் வந்தார். ஊரடங்கு காரணமாக அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை. 
இதையடுத்து பாலத்தின் தடுப்புச்சுவரில் ஏறிய தங்கவேல், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் தண்டவாளம் பகுதியில் குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இது குறித்து தகவல் கிடைத்ததும், சேலம் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் கொரோனா தொற்று விரக்தியில் விவசாயி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story