விதிமுறைகளை கடைபிடிக்காத வியாபாரிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில், சேலம் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


விதிமுறைகளை கடைபிடிக்காத    வியாபாரிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில், சேலம் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 May 2021 10:04 PM GMT (Updated: 30 May 2021 10:04 PM GMT)

கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

சேலம்:
சேலம் மாவட்டத்தில், மளிகை பொருட்களை வீடுகளில் வழங்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமுறைகளை கடைபிடிக்காத வியாபாரிகள், நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மளிகை பொருட்கள்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் தெருத்தெருவாக விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து போலீசார், உள்ளாட்சி துறை மற்றும் வணிகர்களுடன் கலெக்டர் கார்மேகம் நேற்று ஆலோசனை நடத்தினார். 
இந்த கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடையாள அட்டை
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்த வணிகர்கள் குறிப்பாக செவ்வாய்பேட்டையில் உள்ள மொத்த வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லரை வணிகர்களுக்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்யலாம். வணிகர்கள், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யக்கூடாது.
இந்த நிபந்தனையின் அடிப்படையில் அனைத்து மொத்த வியாபாரிகளும் செயல்பட வேண்டும். மொத்த விற்பனையில் பெறப்பட்ட பொருட்களை அனுமதி பெற்ற வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் எடுத்துச்செல்ல வேண்டும். சில்லரை வியாபாரிகள் சிறிய வாகனங்களில் சேலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய வேண்டும்.
சில்லரை வியாபாரிகள் தங்களது கடைகளை திறந்து விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறான விற்பனை காலை 7 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும். வாகனங்களுக்காக அனுமதி அட்டையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் வழங்க வேண்டும். இவ்வாறு மளிகை பொருட்களை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இந்த மளிகை பொருட்கள் விற்பனையின் போது, அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள், வியாபாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story