கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் மது கடத்திய 2 பேர் கைது 447 பாட்டில்கள் பறிமுதல்


கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் மது கடத்திய 2 பேர் கைது 447 பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 May 2021 12:06 AM GMT (Updated: 31 May 2021 12:07 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் மது கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 447 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை அதிக விலைக்கு வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தினமும் மதுபாட்டில்களை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழக போலீசாரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதனிடையே தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் மேற்பார்வையில் தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையில் போலீசார் தர்மபுரி குண்டலபட்டி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 447 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள்

இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கோவிந்தன் மகன் தேவராஜன் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்தி (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி கொண்டு வந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story