திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 May 2021 10:20 PM IST (Updated: 31 May 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 


திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது நெய்வாசல் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக  இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இதன் காரணமாக அவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். ஏற்கனவே கொரோனா முழு ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் சரியாக கிடைக்காமல் வீடுகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டது அவர்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது. 

சாலை மறியல்

இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வெகுண்டெழுந்த கிராம மக்கள், நேற்று மதியம்  திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 
 தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story