விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன


விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன
x
தினத்தந்தி 31 May 2021 10:54 PM IST (Updated: 31 May 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் நிலவுகின்ற தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதனால் தானிய உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தளி
உடுமலை பகுதியில் நிலவுகின்ற தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதனால் தானிய உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
கிராமங்கள்
பச்சை பசேலென்று பரந்துவிரிந்த வயல்கள், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் இருந்து வீசும் நறுமணம் கலந்த காற்று, பறவைகளின் கீதம் என சொர்க்கம் நிறைந்த கிராமத்து வாழ்க்கையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே ஆதாரமாகவும் உயிராகவும் கொண்ட வாழ்க்கை அது.
மாதம் மும்மாரி பொழிந்து தண்ணீர் கிடைத்து துடிப்புடன் நடைபெறும் சாகுபடி. விவசாயத்தின் அழிவுக்கு நவீனம் என்ற ஒற்றைச் சொல் பிள்ளையார்சுழி போட்டது. இயற்கையின் அரவணைப்பில் இருந்த விவசாயம் படிப்படியாக செயற்கை என்ற மாயையின் பிடியில் அகப்பட்டுக்கொண்டது. அதிலிருந்து மீள முடியாமல் இன்று வரையிலும் பரிதவித்து வருகிறது. செயற்கையால் நிலத்தில் ஏற்பட்ட வெப்பத்தில் வறட்சி என்ற அரக்கன் தோன்றினான். அவனால் நிலமும் படிப்படியாக நீர்த்தன்மையை இழந்து வந்தது. விவசாயத்தை தவிர எந்தத் தொழிலும் தெரியாது என்பதால் பூமிக்கு அடியில் தண்ணீர் தேட வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறையால் அழிவு
கிணறு மற்றும் ஆழ்குழாய்கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. குறைவான எண்ணிக்கையில் இருந்தபோது அவற்றில் நீர் இருப்பும் அதிகளவில் கிடைத்தது.ஆனால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இன்று தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. கூடவே கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு, பாசனத்திட்டத்தில் குளறுபடிகள், முறையற்ற நீர்மேலாண்மை உள்ளிட்ட காரணங்களால் விவசாயத்தில் சாதிக்க முடியாமல் போனது.
சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்கு விளைநிலங்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இன்று நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியது. இதனால் தானிய உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டுமனைகள் தோன்றியது
ஆனால் உட்பகுதியில் உள்ள விவசாயிகள் இன்று வரையிலும் விவசாயத்தை காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார்கள்.வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது.இதே நிலையில் சென்றால் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைந்து உணவு பஞ்சம் ஏற்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. விவசாயத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு முதலில் நீர்மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்.ஆறுகள், குளங்கள், அணைகள் ஏரிகள், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் தவறாமல் தூர்வார வேண்டும். பருவமழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை வீணாக்காமல் முழுமையாக சேமிக்க வேண்டும். ஏட்டளவில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.வீணாக கடலில் கலக்கும் ஆறுகளை தடுத்து புதிதாக அணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயத்தை காப்பாற்றுவதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நமது சந்ததியினர் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்.
நீர்மேலாண்மை உயிர்பெறுமா?
அதற்கு முதல்படியாக ஊராட்சி நிர்வாகங்கள் மூலமாக கிராமங்களைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்களை தூர்வாரி பராமரித்து வருவதுடன் அதில் தடுப்பணைகள் கட்டியும், குளம் குட்டைகளை தூர்வாரியும் தண்ணீரை சேமித்து வருவதுடன் வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்பு, நமது கிராமத்தின் மழைநீர் நமக்கே சொந்தம் என்று விளைநிலங்கள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களில் மலைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை புதிதாக குளங்கள் அமைத்து முழுமையாக சேமிப்பது போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தினால் ஓரிரு ஆண்டுகளில் நிலத்தடி நீர்இருப்பு உயர்ந்து ஓவ்வொரு கிராமமும் நிலத்தடி நீர்இருப்பில் தன்னிறைவு பெற்றதாக மாறும்.அத்துடன் இளம் தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.இதனால் விவசாயமும் புத்துயிர் பெற்று நிரந்தர வருமானமும் வேலை வாய்ப்புகளும் ஏற்படும்.

Next Story