20 நாட்களுக்கு பிறகு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு
விழுப்புரத்தில் 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி கடந்த 11-ந் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தற்காலிகமாக 5 நாட்கள் மூடப்பட்டது. மீண்டும் 17-ந் தேதி முதல் வழக்கம்போல் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் ஏலம் நடைபெறும் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்தது.
ஊரடங்கில் விவசாய பணிக்கு அரசு தளர்வு அளித்திருந்தபோதிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விளைபொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வராததால் மேலும் 2 வார காலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
20 நாட்களுக்கு பிறகு திறப்பு
இந்நிலையில் விடுமுறை முடிந்து 20 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. விழுப்புரத்தை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களான 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர், தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த விளைபொருட்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று 2 ஆயிரம் நெல் மூட்டைகளும், உளுந்து 200 மூட்டைகளும், எள் 200 மூட்டைகளும், பருத்தி 50 மூட்டைகளும், கேழ்வரகு 50 மூட்டைகளும், கம்பு 20 மூட்டைகளும் வந்தது. இந்த விளைபொருட்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்திருந்து சமூக இடைவெளியை பின்பற்றி எடைபோட்டு அவற்றை கொள்முதல் செய்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ஒன்று ரூ.750-ல் இருந்து ரூ.850 வரையும், 100 கிலோ எடை கொண்ட உளுந்து மூட்டை ஒன்று ரூ.8,300-ல் இருந்து ரூ.8,400 வரையும், 80 கிலோ எடை கொண்ட எள் மூட்டை ஒன்று ரூ.7,400 முதல் ரூ.7,500 வரையும், 100 கிலோ எடை கொண்ட கேழ்வரகு மூட்டை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், 100 கிலோ எடை கொண்ட கம்பு மூட்டை ஒன்று ரூ.2,300-க்கும், பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 20 நாட்களுக்கு பிறகு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதால் விழுப்புரம் சுற்றுவட்டார விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story