மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி + "||" + 6 more killed for Corona

கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். புதிதாக 1,010 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33,804 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இவர்களில் 246 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 28,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணும், சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திண்டிவனத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திண்டிவனத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.

639 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,443 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 496 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,196 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,998 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 20,829 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 130 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், திருச்சி தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது ஆண் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்தது.

371 பேருக்கு தொற்று

இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,050 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 371 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 829-ல் இருந்து 21 ஆயிரத்து 200-ஆக உயர்ந்துள்ளது.