உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு
உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சில்வர்பாத்திரம், பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி கிராம மக்களை ஊக்கப்படுத்த இளைஞர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை
தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் கடந்த 3 நாட்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டது தெரியவந்தது. இது சுகாதாரத்துறையினர் இடையே மனச்சோர்வை ஏற்படுத்தியது.
பரிசுபொருட்கள்
இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தம்பிதுரை மற்றும் இளைஞர்கள் கிராம மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
அதன்படி தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் சில்வர் தட்டு, தம்ளர், டிபன் பாக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் குடம் போன்ற பரிசு பொருட்களை வழங்க முடிவுசெய்தனர்.
அதற்கேற்ப கொரோனா தடுப்பூசி போட வரும் அனைவரும் மேற்கண்ட பொருட்களில் ஏதாவது ஒன்றை பரிசாக பெற்றுச் செல்லலாம் என சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
பலன் கிடைத்தது
இந்த அறிவிப்பு குன்னத்தூர் மக்களிடையே காட்டுத்தீ போல பரவியது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற முகாமில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சில்வர் தட்டு, தம்ளர், டிபன் பாக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட பொருட்களை இளைஞர்கள் வழங்கினர். நேற்று மட்டும் 80 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பாராட்டு
கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தனது வித்தியாசமான முயற்சியால் கிராம மக்களை தடுப்பூசி போட அழைத்த சமூக ஆர்வலர் தம்பிதுரை மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story