வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு


வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு
x
தினத்தந்தி 31 May 2021 7:09 PM GMT (Updated: 31 May 2021 7:09 PM GMT)

வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

சேரன்மாதேவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாருதி நகரைச் சேர்ந்தவர் நசீர் பாட்ஷா. இவருடைய மகள் ஹாஹின் (வயது 31). இவருடைய மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவனை நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில் உள்ள தனியார் மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக ஹாஹினின் குடும்பத்தினரும் வெள்ளாங்குழியில் வாடகை வீட்டில் வசித்தனர்.

இந்த நிலையில் ஹாஹினின் மகனை பார்ப்பதற்காக உறவினர்கள் வெள்ளாங்குழிக்கு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் பக்கத்து ஊரான திருப்புடைமருதூரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஹாஹினின் தங்கை ரேஷ்மா (26) எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பி சார்யா ரஹ்மத்தும் (25) ஆற்றில் மூழ்கி தத்தளித்தார்.

இதனைப் பார்த்த அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுது கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ரேஷ்மாவை பிணமாக மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து ேசரன்மாதேவி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய சார்யா ரஹ்மத்தின் உடலை தேடும் பணியில் இரவு வரையிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அவரது உடலை தேடும் பணியை தொடர்ந்தனர். இந்த நிலையில் மாலையில் சார்யா ரஹ்மத்தின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது உடலை வீரவநல்லூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரேஷ்மா தனியார் பள்ளி ஆசிரியையாகவும், சார்யா ரஹ்மத் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரவநல்லூர் அருகே ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story