பலசரக்கு கடை ஊழியர்கள் 192 பேருக்கு கொரோனா பரிசோதனை


பலசரக்கு கடை ஊழியர்கள் 192 பேருக்கு  கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 31 May 2021 7:10 PM GMT (Updated: 31 May 2021 7:10 PM GMT)

வீடுகளுக்கு நேரடியாக பொருட்கள் வினியோகம் செய்ய உள்ள பலசரக்கு கடை ஊழியர்கள் 192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஏற்பாடு செய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
வீடுகளுக்கு நேரடியாக பொருட்கள் வினியோகம் செய்ய உள்ள பலசரக்கு கடை  ஊழியர்கள் 192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஏற்பாடு செய்தது. 
முழு ஊரடங்கு 
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பலசரக்கு ஆகியவை வீடுகளுக்கு சென்று வாகனங்கள் மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தற்போது காய்கறிகள் வீடுகளுக்கு சென்று  வழங்கப்பட்டு வருகிறது. 
ஆலோசனை கூட்டம் 
இந்தநிலையில் பலசரக்கு சாமான்களும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தாசில்தார் சரவணன், நகராட்சி கமிஷனர் மல்லிகா, துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் பலசரக்கு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பலசரக்கு சாமான்கள் வீடுகளில் வினியோகம் செய்ய 20 சூப்பர் மார்க்கெட் கடைகள் தேர்வு செய்யப்பட்டன. தங்களுக்கு தேவையான சாமான்களை போனில் சொன்னால் போதும், வீட்டிற்கு வந்து கடை ஊழியர்கள் பொருட்களை வினியோகம் செய்து விடுவர் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 
கொரோனா பரிசோதனை
அத்துடன் வீடுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்பவர்களுக்கு கொரோனா பரிேசாதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முகாமினை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியினர் ஏற்பாடு செய்தனர். 
 ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 20 கடைகளை சேர்ந்த ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். 
192 பேருக்கு பரிசோதனை 
இதுகுறித்து நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் பிரம்மநாயகம், பழனி குரு ஆகியோர் கூறியதாவது:- 
பொதுமக்களுக்கு தடையின்றி பலசரக்கு சாமான்கள் கிடைக்கும் வகையில் 20 கடைகள் தேர்வு செய்யப்பட்டன. அந்த கடையில் இருந்து பொருட்களை வினியோகம் செய்ய ஊழியார்கள் 192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்னும் இரண்டு தினங்களில் வந்துவிடும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story