மூட்டை, மூட்டையாக காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள்
அரியலூரில் மொத்த வியாபார கடைகள் திறக்கப்படாததை அறியாமல் மூட்டை, மூட்டையாக காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் புலம்பியவாறு திரும்பிச்சென்றனர்.
அரியலூர்:
காய்கறி விற்பனை
அரியலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து மினி லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் விற்பதற்கு அனுமதி தரப்பட்டது. மேலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மொத்த காய்கறி விற்பனை அதிகாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை நடந்தது. சில நாட்களில் அதே இடத்தில் சில்லறை வியாபாரத்தை ஒருசிலர் செய்தனர்.
மினி லாரிகளில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்று நகரில் உள்ள தெருக்கள் மற்றும் கிராமங்களில் ஒரே இடத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நிற்கக்கூடாது என்ற உத்தரவையும் மீறி பலர் ஒரே இடத்தில் பல வாகனங்களில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
மூட்டை, மூட்டையாக கொண்டு வந்தனர்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அரியலூர் போலீசார் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்த வாகனங்கள், அனுமதி பெற்ற நேரத்துக்கு மேல் விற்பனை செய்த வாகனங்களை பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்கள். பின்னர் வியாபாரிகளை அழைத்து அனைவரும் ஒற்றுமையுடன் அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு வியாபாரம் செய்ய வேண்டும். சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை மொத்தமாக காய்கறி விற்கும் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை. இதை அறியாமல் அரியலூர் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து வெண்டைக்காய், கொத்தவரங்காய், கத்திரிக்காய், மாங்காய், முருங்கைக்காய், கீரைகள் ஆகியவற்றை விற்பதற்காக மூட்டை, மூட்டையாக கொண்டு வந்தனர்.
விவசாயிகள் புலம்பல்
ஆனால் அங்கு வியாபாரிகள் யாரும் இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முதல் நாளே கடைகள் இருக்காது என்ற தகவல் தெரிந்தால் காய்கறிகளை பறித்து இருக்கமாட்டோம். தற்போது வெளியூர்களுக்கும் அனுப்ப முடியாது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பியவாறு விவசாயிகள் திரும்பி சென்றனர்.
இது பற்றி மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, அனுமதிக்கப்பட்ட வாகனம் மட்டுமில்லாமல் பல வாகனங்கள் காய்கறி விற்பனை செய்கின்றன. இதுபற்றி நாங்கள் கலந்து ஆலோசனை செய்து, அதிகாரிகள் யாருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி தருகிறார்களோ, அதன்பிறகு தெருக்களில் வியாபாரம் செய்வோம். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் மீண்டும் கடையை நடத்த தயாராக உள்ளோம், என்று கூறினார்கள். இதனால் நேற்று அரியலூர் சுற்றுவட்டார பகுதியில் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் அதிக விலைக்கும் விற்கப்பட்டது.
Related Tags :
Next Story