ரெயிலில் மதுபானம் கடத்திய அக்காள் தம்பி கைது


ரெயிலில் மதுபானம் கடத்திய அக்காள் தம்பி கைது
x
தினத்தந்தி 31 May 2021 8:40 PM GMT (Updated: 31 May 2021 8:40 PM GMT)

பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபானம் கடத்திய அக்காள்-தம்பியை போலீசார் கைது செய்தனர். 9 பைகளில் இருந்த 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்: 

மைசூர் ரெயிலில் சோதனை 
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. 

இதில் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருப்பதால், மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானத்தை கடத்தி வந்து விற்பனை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. 

எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருகிற ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. 

அந்த ரெயிலில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தாகிர், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

300 மதுபாட்டில்கள்
அப்போது ஒரு ஏ.சி. பெட்டியில் சந்தேகப்படும் வகையில் நிறைய பைகள் இருந்தன. இதனால் அந்த பைகளை திறந்து போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 9 பைகளில் 300 மதுபாட்டில்கள் இருந்தன. 

மேலும் அந்த பைகளுடன் பயணம் செய்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், தூத்துக்குடி முத்தம்மாள்புரத்தை சேர்ந்த அன்னடிஷா (வயது 26) என்பதும் தெரியவந்தது.


மேலும் அவரும், அவருடைய தம்பி ராஜாவும் (20) சேர்ந்து தூத்துக்குடியில் இருந்து மீன்களை லாரியில் பெங்களுரூக்கு கொண்டு சென்று அங்கு விற்பனை செய்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்ட போது, மதுபானத்தை வாங்கி செல்ல முடிவு செய்தனர். 

இதையடுத்து 300 மதுபாட்டில்களை வாங்கி 9 பைகளில் நிரப்பினர்.

அக்காள்-தம்பி கைது 
மேலும் பெண் என்றால் போலீசார் சோதனை நடத்தாமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்து ஏ.சி. பெட்டியில் அன்னடிஷாவும், சாதாரண பெட்டியில் ராஜாவும் பயணம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள், தம்பி 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story