நாலுகால் மண்டபத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


நாலுகால் மண்டபத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 31 May 2021 9:25 PM GMT (Updated: 31 May 2021 9:25 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நாலுகால் மண்டபத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன

திருச்சி
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே மிகவும் பழமையான நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்திற்கு நம்பெருமாள் வழிநடை உபய மண்டபம் என பெயர். ஆடிப்பெருக்கு அன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வதற்காக வரும்போது இந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
ஆக்கிரமிப்பு
கடந்த 1977-ம் ஆண்டிலிருந்து இந்த மண்டபம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மண்டபத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்கள் அதில் புத்தக கடை, பெட்டிக்கடை மற்றும் இரவு நேர டிபன் கடைகளை நடத்தி வந்தனர்.
அந்த கடைக்காரர்களை காலி செய்யும்படி கோவில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு தீர்ப்பு
பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கோவில் நிர்வாகம் சார்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் 30-5-2021-க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் கோவில் நிர்வாகம் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தனர்.
கடைகள் அகற்றம்
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அந்த நாலுகால் மண்டபத்தில் இருந்த கடைகளின் தடுப்புகளை அகற்றி எந்திரங்களின் உதவியுடன் பிரித்து எடுத்தனர். தற்காலிகமாக எழுப்பப்பட்டிருந்த சுவர்களையும் உடைத்து எறிந்தனர். இதனைத்தொடர்ந்து அதன் அருகில் உள்ள இன்னொரு மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தொடர்ந்தது.
ராஜகோபுரம் அருகில் பதினாறு கால் மண்டபம் என ஒரு பழமைவாய்ந்த மண்டபம் உள்ளது. அந்த மண்டபமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு வசதியாக அவற்றை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story