தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்ட வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி


தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு  செல்போனில் பாட்டு கேட்ட வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி
x
தினத்தந்தி 1 Jun 2021 4:02 AM IST (Updated: 1 Jun 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்ட வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்ட வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாட்டு கேட்பது வழக்கம்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவர் தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்து விவசாய வேலைகளுக்கு சென்று வந்தார்.
இவருடைய அக்காள் வீட்டின் அருகே சேலம்-சென்னை ரெயில்வே தண்டவாளம் உள்ளது. ஓய்வு நேரங்களில் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் மூலம் ஹெட்செட் போட்டுக்கொண்டு வெங்கடேஷ் பாட்டு கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
ரெயிலில் அடிபட்டு பலி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சரக்கு ரெயில் வந்தது. வெங்கடேஷ் காதில் ஹெட்செட் போட்டு இருந்ததால், ரெயில் வந்த சத்தம் அவருக்கு கேட்கவில்லை.
இதனால் ரெயிலில் அடிபட்டு, உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அவரை காணாததால், உறவினர்கள் அங்கு தேடிப்பார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் வெங்கடேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
செல்போனில் பாட்டு கேட்கும் மோகத்தால் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story