சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்


சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
x
தினத்தந்தி 31 May 2021 10:45 PM GMT (Updated: 31 May 2021 10:45 PM GMT)

சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சேலம்:
சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தடுப்பூசிகள் போடவில்லை. 
சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அதேசமயம் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சேலம் ராஜாஜி ரோட்டில் உள்ள சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படுகிறது. 
இதற்காக நேற்று காலை பள்ளியில் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக தடுப்பூசி போடுவதற்கு இளைஞர்கள் ஆர்வமாக வந்தனர். 
நீண்ட வரிசை
அதேபோல் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது. அங்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். ஒரு சிலர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வந்திருந்தனர்.
மேட்டூர், ஆத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். கொரோனா என்ற அரக்கனிடம் இருந்து பொதுமக்கள் தப்பிக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். எனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story