ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் காதல் கணவர் முன்னிலையில் இளம்பெண்ணை காரில் கடத்திய உறவினர்கள் 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு


ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் காதல் கணவர் முன்னிலையில் இளம்பெண்ணை காரில் கடத்திய உறவினர்கள் 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 May 2021 11:22 PM GMT (Updated: 31 May 2021 11:22 PM GMT)

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், காதல் கணவர் முன்னிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் காரில் கடத்திச் சென்றனர். அவர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓமலூர்:
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், காதல் கணவர் முன்னிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் காரில் கடத்திச் சென்றனர். அவர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
ஓமலூர் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவருடைய மகன் ஜீவா (வயது 21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ரவி என்பவருடைய மகள் தீபா (19).
இந்த நிலையில் ஜீவாவும், தீபாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் ஊத்துக்குளி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 
போலீசில் தஞ்சம்
இதனிடையே தீபாவின் பெற்றோர் தங்களது மகளை ஜீவா கடத்தி சென்றுவிட்டதாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.
போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ஜீவா, தீபா ஆகியோர் நேற்று முன்தினம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 2 பேரும் மேஜர் என்பதால், அவர்களுடைய குடும்பத்தினரிடம் எழுதி வாங்கி கொண்டு ஜீவாவுடன் அவரது காதல் மனைவி தீபாவை அனுப்பி வைத்தனர். 
காரில் கடத்தல்
இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து ஜீவா ஓமலூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மனைவி தீபாவை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து காரில் அழைத்துச்சென்றேன். ஓமலூர் பெரமச்சூர் மேம்பாலம் அருகே எனது மனைவி தீபாவின் உறவினர்கள் பாலகிருஷ்ணன், நல்லசிவன், பூர்ணவேலு, சூர்யா, கவுதம், பிரசாந்த் ஆகியோர் ஒரு காரில் வந்து வழிமறித்தனர். 
பின்னர் என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி எனது காதல் மனைவி தீபாவை காரில் கடத்திச்சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது மனைவியை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
6 பேருக்கு வலைவீச்சு
இந்த புகாரின் பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்திமுனையில் தீபாவை கடத்திச்சென்ற பாலகிருஷ்ணன் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story