தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்
ஊட்டியில் உள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக டோக்கன் பெற நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் உள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக டோக்கன் பெற நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்த காலை முதலே பொதுமக்கள் வந்தனர்.
இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து மூடப்பட்ட நுழைவுவாயில் முன்பு நின்றிருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது. தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் மற்றொரு நுழைவுவாயில் வழியாக உள்ளே சென்று மைதானத்தில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்தனர். நேரம் செல்ல, செல்ல அதிகம்பேர் வந்ததால் 2 நுழைவுவாயில்களும் மூடப்பட்டது.
கூட்டம் அதிகரிப்பு
45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 45 நாள் நிறைவடைந்த நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி, 84 நாட்கள் நிறைவடைந்த நபர்களுக்கு கோவிஷூல்டு தடுப்பூசி 2-வது டோஸ் போடப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் இடத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதேபோல் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இருப்பு இல்லை
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்த வருமாறு தெரிவித்தபோது பொதுமக்கள் முன்வரவில்லை. தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து தடுப்பூசி செலுத்த வருகின்றனர்.
ஊட்டி தனியார் பள்ளியில் நேற்று 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இருப்பு இருந்தது. அதற்குமேல் இருப்பு இல்லை. தடுப்பூசி வருவதற்கு ஏற்ப செலுத்தப்பட்டு வருகிறது. குன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story