2 வாரங்களுக்கு பிறகு சென்னையில் விமான சேவை அதிகரிப்பு - பயணிகள் எண்ணிக்கையும் கூடியது


2 வாரங்களுக்கு பிறகு சென்னையில் விமான சேவை அதிகரிப்பு - பயணிகள் எண்ணிக்கையும் கூடியது
x
தினத்தந்தி 1 Jun 2021 3:18 AM GMT (Updated: 1 Jun 2021 3:18 AM GMT)

2 வாரங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை அதிகரித்து உள்ளதுடன், பயணிகள் எண்ணிக்கையும் கூடி உள்ளது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா பீதியால் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்து, விமான சேவைகளும் பெருமளவு குறைந்திருந்தன.

கடந்த மாதம் வரை 165 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 2 வாரங்களாக 62 விமானங்களே இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை தாண்டவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது.

இதனால் 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 2 தினங்களாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 40 புறப்பாடு விமானங்களும், 40 வருகை விமானங்களும் என 80 விமானங்கள் இயக்கப்பட்டு, அதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனா்.

இதேபோல் நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு 42 விமானங்களும், பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 41 விமானங்களும் என மொத்தம் 83 விமானங்கள் சென்று வந்தன.

பயணிகள் எண்ணிக்கையும் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக விமான பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது விமான நிலைய வட்டாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று விரைவில் வெகுவாக குறைந்து, ஊரடங்கு தளா்வுகளை அரசு அதிகரித்ததும் சென்னை விமான நிலையம் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Next Story