இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் உயிரிழப்பு - சென்னை அரசு பல் ஆஸ்பத்திரி ‘டீன்’ தகவல்


இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் உயிரிழப்பு - சென்னை அரசு பல் ஆஸ்பத்திரி ‘டீன்’ தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2021 3:24 AM GMT (Updated: 1 Jun 2021 3:24 AM GMT)

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை பழக்க பக்கவிளைவால் உயிரிழக்கின்றனர் என சென்னை அரசு பல் ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் விமலா தெரிவித்தார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-ந்தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புகையிலை ஒழிப்பு தின நிகழ்வு நடைபெற்றது. அதில், ‘புகையிலை பழக்கத்தை நிறுத்த உறுதிகொள்’ என்ற தலைப்பில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு டாக்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் விமலா தொடங்கிவைத்து, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு செய்திகளை ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு கூறினார். பின்னர் அனைவரும் புகையிலை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அரசு பல் ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் விமலா கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் புகையிலை ஒழிப்பு தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒரு கருப்பொருளை வெளியிடுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘புகையிலை பழக்கத்தை நிறுத்த உறுதிகொள்’ என்பது ஆகும்.

உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நடத்திய ஆய்வின்படி, நம் நாட்டில் 29.6 சதவீதத்தினர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதன் காரணமாக வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த புகையிலைப் பழக்கத்தால் வரும் பக்கவிளைவுகளால் உயிரிழக்கிறார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story