மேலும் ஒரு இளம்பெண் புகார்: பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் கைது


மேலும் ஒரு இளம்பெண் புகார்: பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 9:48 AM IST (Updated: 1 Jun 2021 9:48 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்ததால் கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக இருந்தவர் கெபிராஜ் (வயது 41). தற்போது இவர், அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

போலீஸ்காரர்கள், ராணுவ வீரர்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இவர் கராத்தே பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கராத்தே பயிற்சி பெற்ற போதும், கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு விட்டு வரும்போதும் கெவிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் கராத்தே மாஸ்டர் கெவிராஜை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மேலும் ஒரு இளம்பெண், கெவிராஜ் மீது போலீசில் பாலியல் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கெபிராஜின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விடிய, விடிய விசாரணை செய்தனர். கெபிராஜின் நண்பர்கள் சிலரை அழைத்து பயிற்சியின்போது அவர் எப்படி செயல்படுவார்?, மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்வார்?. என்பது குறித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணைகளுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினார்கள். வருகிற 14-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story