கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்தபோது கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் உயிரிழப்பு; புதுவையில் பதிவான முதல் பலி
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலியாக உயிரிழந்தார்.
கருப்பு பூஞ்சை
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி மக்களை பாதித்து வருகிறது. புதுவை மாநிலத்திலும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
இதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களது கண்பார்வையை இழந்துள்ளனர். இந்த நோய் குறித்து சுகாதாரத்துறை சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் பலிஇந்தநிலையில் புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவரது மனைவி எழிலரசி (வயது 62) கொரோனா தொற்று பாதிப்புக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்ற வந்தநிலையில் நேற்று காலை எழிலரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் புதுவையில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி பதிவாகி உள்ளது.
புதுவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 37 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய்களும் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் கொரோனா நோயாளிகள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.