வாணாபுரம், தச்சம்பட்டு பகுதிகளில் போன்செய்தால் வீடுதேடி வரும் சாராயம்
வாணாபுரம், தச்சம்பட்டு பகுதிகளில் போன்செய்தால் வீடுதேடிச்சென்று சாராயம் விற்பனை செய்யப்படுகிறது
வாணாபுரம்
வீடுதேடிச் சென்று சாராயம் விற்பனை
கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பக்கத்து மாநிலங்களுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து சிலர் மதுவிற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் ஊரடங்கை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாததால் போன் செய்தால், சாராயத்தை வீடுதேடிச் சென்று விற்பனை செய்கின்றனர்.
போன் செய்தால் போதும்
திருவண்ணாமலை மாவட்ட எல்லையாக விளங்கும் வாணாபுரம் மற்றும் தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் மற்றும் மலை கிராமங்கள் உள்ளதால் இப்பகுதிகளில் மறைவான இடங்களில் சாராயம் காய்ச்சி அதனை கடத்திவந்து தேவைப்படுபவர்களின் வீட்டுக்கே சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சாராயம் லிட்டர் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்கின்றனர். தற்போது காய் கறி, மளிகை பொருட்களை வீடுதேடிச்சென்று விற்பனைசெய்வது போன்று சாராய வியாபாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் வீட்டிற்கு தேடிச்சென்று சாராய விற்பனை செய்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தினமும் சாராயம் விற்பவர்களை கைது செய்து, வாகனங்கள், சாராயத்தை பறிமுதல் செய்தாலும், சாராய விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story