கொரோனா குறித்த தகவல்களை அறிய புதிய செயலி; புதுச்சேரி கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்
கொரோனா மருத்துவமனைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கான புதிய செயலியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதிய செயலி அறிமுகம்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிலவரம் குறித்த சரியான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் சிட்டி கொரோனா தகவல் பகிர்வு தளம் (Chat Bot) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு புதிய செயலியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காலி படுக்கைகள் விவரம்புதிய செயலி மூலமாக புதுவை மாநிலத்தின் கொரோனாவின் தற்போதைய நிலவரம், தடுப்பூசி மற்றும் பரிசோதனை மையங்கள், ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள படுக்கைகளில் விவரம் ஆகியவை குறித்த சரியான தகவல்களை பொதுமக்கள் பெற முடியும். மேலும் 7598877833 என்ற வாட்ஸ் அப் எண்ணின் மூலமாகவும் தகவல்களைப் பெறமுடியும். மேற்கண்ட எண்ணிற்கு HI என குறுஞ்செய்தி அனுப்பினால் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
பத்திரிகைகளுக்கு பாராட்டுகொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தங்களுடைய வாழ்வையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் புதுச்சேரியில் உள்ள பத்திரிகைகள் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றன. புதுச்சேரியில் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நிகழ்ச்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை கவர்னர் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாராத்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.