புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ரங்கசாமி அழைத்தால் மட்டுமே இனி பேச்சுவார்த்தை; பா.ஜ.க. மேலிடம் திடீர் முடிவு


புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ரங்கசாமி அழைத்தால் மட்டுமே இனி பேச்சுவார்த்தை; பா.ஜ.க. மேலிடம் திடீர் முடிவு
x
தினத்தந்தி 1 Jun 2021 12:01 PM GMT (Updated: 1 Jun 2021 12:01 PM GMT)

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ரங்கசாமி அழைத்தால் மட்டுமே இனி பேச்சுவார்த்தை நடத்துவது என்று பா.ஜ.க. மேலிடம் திடீரென முடிவு செய்துள்ளது.

ரங்கசாமி மவுனம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 29 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை அமைச்சரவை பதவி ஏற்காத நிலை இருந்து வருவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க. 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்பது முடிவானதும் ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து பேசினார். அப்போதே அமைச்சர் பதவி இடங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்தநிலையில் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்தடுத்து அரசியல் நிகழ்வாக பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையெல்லாம் சேர்த்து சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 12 ஆக உயர்ந்தது.

பா.ஜ.க. அழுத்தம்

கடந்த 26-ந்தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து அமைச்சரவை பதவிகளை பகிர்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜ.க. தரப்பில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் இடங்கள், சபாநாயகர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு ரங்கசாமி ஒப்புக்கொள்ளவில்லை. துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்து இதுதொடர்பாக அழுத்தம் கொடுத்த போதும் ரங்கசாமி பிடி கொடுக்காமல் நழுவி வருவது பா.ஜ.க. மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்தது.

பா.ஜ.க. மேலிடத்தில் புகார்

இந்த பிரச்சினையில் சுமுகமான முடிவு எடுப்பதற்காக மத்திய உள்துறை இணைமந்திரி கிஷண்ரெட்டி புதுச்சேரி வந்து ரங்கசாமியை சந்தித்து பேசுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கட்சி அழைப்பின் பேரில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து புகார் தெரிவித்ததுடன் துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகளை பெற்றே தீர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனாலும் அமைச்சரவையில் மெஜாரிட்டி இடங்களை வைத்துக் கொள்வதில் உறுதியாக இருப்பதால் அதில் இருந்து பின்வாங்காமல் ரங்கசாமி பிடிவாதமாக இருந்து வருகிறார்.

மத்திய மந்திரி வருகை ரத்து

இதுபோன்ற சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது சுமுகமாக இருக்காது என்று கருதி ரங்கசாமியுடன் இன்று மத்திய மந்திரி கிஷண்ரெட்டி பேச்சுவார்த்தை நடத்துவது ரத்து செய்யப்பட்டதாக பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்தது. அமைச்சரவை விவகாரம் குறித்து பலமுறை முயன்றும் ரங்கசாமி பிடி கொடுக்காததால் இனி அவராக அழைக்கும் வரை இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்வதில்லை என்று பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே சுமுகமான முடிவு எட்டப்படாததால் அமைச்சரவை பதவி ஏற்பு இன்னும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டு இருப்பது புதுவை அரசியல் சூடு குறையாமல் இருந்து வருகிறது.


Next Story