திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Jun 2021 7:04 PM IST (Updated: 1 Jun 2021 7:04 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தொற்று வராமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. 

பொதுமக்கள் ஆர்வம்
அதை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களில் ஏராாளமான மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் நடந்த முகாமில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையிருப்பலில் இருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்றே தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பூசி போடப்படாது

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 80-ல் இருந்து 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்.
சில முகாம்களில் நேற்று மதியமே தடுப்பூசி இருப்பு முடிந்து விட்டது, தற்போது மாவட்டத்தில் கையிருப்பில் இருந்த ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருத்து தீர்ந்து விட்டது. ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது டோஸ் போட்டு கொள்பவர்களுக்கு மட்டும் அதுவும் குறைந்த அளவே உள்ளது. புதிதாக தடுப்பூசி வரும் வரை புதியதாக யாருக்கும் தடுப்பூசி போடப்படாது. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி மருந்து வந்த பிறகு தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும்’’ என்றனர்.

Next Story