கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.
கூடலூர்:
கூடலூர் அருகே பளியன்குடி கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர்.
இதையடுத்து கூடலூர் காய்கறி வியாபாரிகள், லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் நேதாஜி அறக்கட்டளை சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, பளியன்குடியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பழங்குடியின மக்களுக்கு முக கவசத்துடன் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
பின்னர் டி.ஐ.ஜி. ேபசுகையில், பளியன்குடி கிராமத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், உயர்கல்வி படிக்க வசதி இல்லாதவர்கள், படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு போலீஸ் துறை சார்பில் உதவி செய்யப்படும். மேலும் இந்த பகுதிக்கு ஒரு போலீஸ் நியமிக்கப்பட உள்ளார். அவரிடம் குறைகளை தெரிவித்தால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் கலெக்டரிடம் தெரிவித்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், வனச்சரகர் அருண்குமார், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார டாக்டர் காஞ்சனா மற்றும் காய்கறி வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story