கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர வாகன சோதனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி கூடலூர் பகுதியில் கேரளா-கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் இருந்து சரக்கு லாரிகளில் அதிகளவு மது கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கூடலூர்-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
அப்போது கர்நாடகாவில் இருந்து பால் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், லாரியில் மறைந்து வைத்து 505 மதுபாக்கெட்டுகள், 30 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்கள், மதுபாக்கெட்டுகளையும் மற்றும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பொள்ளாச்சி பெரிய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 23), திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
4 பேர் கைது
இதேபோல கர்நாடகாவில் இருந்து வந்த மற்றொரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மறைத்து வைத்து 38 மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து லாரியில் இருந்த ஊட்டி காந்தல் இந்திரா காலனியை சேர்ந்த ரவி (28), திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த சரவணசெந்தில் (39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து கூடலூக்கு மது கடத்தி வந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து, 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கடந்த வாரம் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story