கடனை திருப்பி செலுத்தாததால் மாட்டை ஓட்டிச்சென்ற பெண்
திண்டிவனத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் மாட்டை ஓட்டிச்சென்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் பூதேரி செந்தமிழ் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி கலா(வயது 35). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி லட்சுமி(48) என்பவரிடம் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் லட்சுமி, கலாவின் வீட்டிற்கு சென்று வட்டி மற்றும் அசல் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, வட்டியுடன் பணத்தை தந்து விட்டு மாட்டை மீட்டுச்செல் என்று கூறியபடி கலா வளர்த்து வந்த பசுமாட்டை ஓட்டிச்சென்றார். இதையடுத்து நேற்று காலை கலா, அவரது மகன் கோபி ஆகியோர் மாட்டை மீட்டு வருவதற்காக லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கலாவையும், கோபியையும் தாக்கி லட்சுமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கலா கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். மேலும், லட்சுமி வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டையும் மீட்டு கலாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story