தளர்வில்லா ஊரடங்கு நீட்டிப்பு: தர்மபுரி மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
தர்மபுரி:
தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. வருகிற 7-ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 3-ல் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
போலீசார் சோதனை
அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மருத்துவ காரணங்களுக்காகவும், இறப்பு காரணங்களுக்காகவும் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்களில் செல்ல இ-பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 சோதனைச்சாவடிகளில் போலீசார் நேற்று வாகனங்களில் வந்தவர்கள் இ-பதிவு செய்து அனுமதி பெற்று உள்ளார்களா? என தொடர்ந்து சோதனை நடத்தினார்கள். இ-பதிவு ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மாவட்டத்துக்குள் அந்த வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் காரிமங்கலம் அருகே அமைந்துள்ள சோதனைச்சாவடி, தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றில் வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு சான்று ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. காரிமங்கலம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் நடந்த வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 சிறு சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வாகனங்களில் செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகள், அவசிய மருத்துவத்தேவைகளுக்காக செல்கிறார்களா? என்பதை முழுமையாக விசாரித்த பின்னரே மேற்கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.
,,,,,,,,,,,,
Related Tags :
Next Story