500 பேரிடம் பண மோசடி: தபால் நிலைய ஊழியரை சிறைபிடித்த பொதுமக்கள்
கந்தம்பாளையம் அருகே 500 பேரிடம் பண மோசடி செய்த தபால் நிலைய ஊழியரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தம்பாளையம்:
பண மோசடி
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே மேல்சாத்தம்பூர் மாரியம்மன் கோவில் புதூரில் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் குன்னமலை ஊராட்சி இரும்பு பாலம் அருந்ததியர் காலனியை சேர்ந்த தங்கவேல் (வயது 31) ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தபால் நிலைய தொடர் வைப்பு நிதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செலுத்திய பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
மோசடி குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட தபால் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் தங்கவேலிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது நல்லூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
சிறைபிடிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் தபால் நிலையத்தில் தங்கவேலிடம் தபால் துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நீடித்தது. அப்போது தங்கவேலிடம் இருந்து 300 பேரின் தொடர் வைப்பு நிதி கணக்கு புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 200-க்கும் மேற்பட்டோரின் கணக்கு புத்தகங்கள் மாயமாகி விட்டதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தங்கவேலிடம் விசாரணை நடைபெற்று வருவதை அறிந்த, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தபால் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் விசாரணை முடிந்து வெளியே வந்த தங்கவேலை சிறைபிடித்தனர். மேலும் அவரிடம் தங்களது பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்ட பணம் உரிய விசாரணைக்கு பிறகு பெற்று தரப்படும் என தெரிவித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் தங்கவேலை அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story