சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. வெளிமாவட்டத்தில் இருந்து இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களையும், அனுமதியின்றி ஊர் சுற்றிய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுகாதார பணியாளர்களும், மருத்துவத்துறையினரும் விரைந்து செயல்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.