தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உடுமலை
உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்றின்2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, ஆங்காங்கு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சுகாதாரத்துறையின் மூலம் உடுமலை நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் (மே) 30-ந்தேதி 200 பேருக்கும், நேற்று முன்தினம் 232 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
காலை 6 மணிக்கே வந்து காத்திருப்பு
இந்த நிலையில் வரிசை எண்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதால் டோக்கன் வாங்குவதற்காக நேற்று காலை 6 மணி முதலே பொதுமக்கள் அங்கு வரத்தொடங்கினர். எப்போதும் காலை 8 மணிக்கு தான் டோக்கன் கொடுப்பார்கள் என்ற நிலையிலும் டோக்கன் வாங்குவதற்கு பொதுமக்கள் வந்துகொண்டே இருந்தனர். அதில் ஆண்கள் தனிவரிசையாகவும், பெண்கள் தனிவரிசையாகவும் நின்றிருந்தனர். இங்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படுமா? என்று தெரியாத நிலையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இங்கு18வயது முதல்44வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் கோவி ஷீல்டு தடுப்பூசி என்று அறிவிப்பு பலகையில் எழுதி ஒட்டப்பட்டிருந்த நிலையில் இதில் 18 வயது முதல் 44வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக டோக்கன் வாங்குவதற்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பூசிகள் வந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஏமாற்றம்
ஆனால் நேற்று கொரோனா தடுப்பூசிகள் வரவில்லை என்ற தகவல் காலை 8.30மணிக்கு பிறகு தெரியவந்தது. அப்படியிருந்தும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வரிசையிலேயே நின்றிருந்தனர்.
இதைத்தொடர்ந்து வரிசையில் நின்றிருந்தவர்களிடம், சுகாதாரத்துறையினர் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை தெரிவித்துவிட்டு செல்லுங்கள். கொரோனா தடுப்பூசி வந்ததும் நீங்கள் வரிசைப்படி அழைக்கப்படுவீர்கள் என்று கூறினர்.
அதன்படி நோட்டுபுத்தகத்தில் பெயர் மற்றும் செல்போன் எண்எழுதப்பட்டன. மணிக்கணக்கில் காத்துநின்றிருந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி வராததைத்தொடர்ந்து பெயர் மற்றும் செல்போன் எண்ணைமட்டும் பதிவு செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று மட்டும் 500பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.ஏற்கனவேகடந்த31-ந்தேதி பதிவு செய்துள்ள100பேருக்கும் இந்த தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
தொடர்ந்து தினசரி கொரோனா தடுப்பூசி போடப்படுமா? என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.
Related Tags :
Next Story