தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிரம்பி வழியும் பிணவறை திறந்தவெளியில் வைக்கப்படும் உடல்கள் உறவினர்களிடம் விரைந்து வழங்க கோரிக்கை
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறை நிரம்பி வழிவதால் திறந்தவெளியில் உடல்கள் வைக்கப்படும் நிலை உள்ளது. இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் விரைந்து வழங்க கோரிக்கை வைக்கப்படுகிறது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறை நிரம்பி வழிவதால் திறந்தவெளியில் உடல்கள் வைக்கப்படும் நிலை உள்ளது. இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் விரைந்து வழங்க கோரிக்கை வைக்கப்படுகிறது.
கொரோனாவால் இறப்பு
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வல்லம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், இணை நோய்களின் தாக்கத்தினாலும் உயிரிழந்து விடுகின்றனர். இப்படி இறந்தவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை சாந்திவனம் மயானம், ராஜாகோரி மயானத்தில் தினமும் ஏராளமான உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.
நிரம்பி வழியும் பிணவறை
இருந்தாலும் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் இறப்பதால் அவர்களது உடல்கள் உடனுக்குடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் பிணவறையில் வைக்கப்படுகிறது. இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இறந்தவர்களின் உடல்கள் நிரம்பி வழிகின்றன. பிணவறையில் வைக்க இடம் இல்லாததால் திறந்தவெளியில் ஸ்டிரெச்சரில் உடல்களை வைக்கும் அவல நிலை உள்ளது.
பிணவறையில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் உடல்களால் நிரம்பி விட்டதால் தரையில் ஆங்காங்கே உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை வாங்கி செல்வதற்காக உறவினர்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனுக்குடன் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story